மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி: லேத் பட்டறை உரிமையாளர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!

 
erode

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவர் கல்லூரி இறந்த சம்பவத்தில் லேத் பட்டறை உரிமையாளர் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் உறவினர்கள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள கந்தசாமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. தூய்மை பணியாளர். இவரது மகன் ஹரிசங்கர் (17). இவர் காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹரிசங்கர், ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான லேத் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஹரிசங்கர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

erode

பின்னர், சிவகிரி போலீசார் ஹரிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலை வாங்கிய லேத் உரிமையாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஹரிசங்கரின் உறவினர்கள், சிவகிரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை ஹரிசங்கரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் ஹரிசங்கரின் இறப்புக்கு காரணமான லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை கைதுசெய்ய வேண்டும் என கூறி இருந்தனர்.