கும்பகோணத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி!

 
kmbakonam

கும்பகோணத்தில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில், பேருந்து ஒட்டுநரை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் தேவமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சதிஷ்குமார்(20). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசினர் கல்லூரியில் பி.எஸ்சி இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். கும்பகோணம் 60 அடி சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது, பேருந்தின் படியில் நின்றிருந்த சதிஷ் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக பயணிகள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் சதிஷ்குமார் உயிரிழந்தார். 

kumbakonam

தகவல் அறிந்து மருத்துவமனை முன்பு திரண்ட சதிஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் விபத்துக்கு காரணமாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்யக்கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கும்பகோணம் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.