கொல்லிமலையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... கள்ளத்தொடர்பால் நேர்ந்த சோகம்!

 
dead

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கள்ளத்தொடர்பு வெளியே தெரிய வந்ததால் வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லம். இவரது மகன் வல்லரசு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செல்வம் இறந்துவிட்டார். இதனால் வல்லரசுவை, அவரது தாய் புஷ்பா வளர்த்து வந்தார். இந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக புஷ்பா கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். வல்லரசு, பரமத்திவேலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அவர், அவ்வப்போது கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

rasipuram

இந்த விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்த நிலையில், அவர் மனைவியை கண்டித்து கள்ளத்தொடர்பை கைவிடும் படி கூறி உள்ளார். இதனால் அந்த பெண் வல்லரசு உடன் பழகுவதை கைவிட்டு உள்ளார். இந்த நிலையில், தனது தவறான உறவு வெளியே தெரியவந்ததால் மனவேதனையடைந்த வல்லரசு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வல்லரசுவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து, செங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது வல்லரசு தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தாய் புஷ்பா புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.