நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு... காதலன் மீது மாணவியின் தாய் புகார்!

 
nithiravilai

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது காதலன் விஷம் கொடுத்ததால் மாணவி இறந்ததாக கூறி மாணவியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அடுத்த வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர். இவரது மகள் அபிதா (19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், அபிதா, பள்ளி பருவம் முதலே அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞர் திருமணம் செய்வதாக கூறி, அவரிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் அறிந்த இளைஞரின் பெற்றோர், அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் கடந்த சில நாட்களாக  அபிதாவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

dead body

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி அபிதாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை பெற்றோர் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று அபிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அபிதாவின் தாய் தங்கபாய், தனது மகள் இறப்புக்கு அவரது காதலன் தான் காரணம் என கூறி நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிதாவை அவரது காதலன் அழைத்துச் சென்றதாகவும், அவரை சந்தித்து விட்டு வந்த பின்னரே அபிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் அபிதாவுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, அபிதா விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது  உடல் நல குறைவால் இறந்தாரா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.