திருவாரூர் அம்மையப்பன் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்பு!

 
tvr

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த அம்மையப்பன் கிராமத்தில் மே தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்றார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரம் அம்மையப்பன் கிராமத்தில், மே தினத்தையொட்டி இன்று ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது, இன்றைய தினம் திருவாருர் மாவட்டம் முழுவதும் 430 ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபா கூட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்தும்,  கிராமத்திற்கு தேவையான நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு அரசுக்கு திட்ட அறிக்கையாக அனுப்பப்படுகிறது. 

tvr

இந்த கிராம சபை கூட்டத்தின் கூட்டப்பொருளாக கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் பணிகள், மின்சார பணிகள், அரசு நிதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினம், 100 நாள் வேலை திட்டம், சுகாதாரம், பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட 19 வகையான கூட்டப் பொருட்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தற்போது துர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால்கள் துர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை கிராம மக்கள், உழவர் குழுக்கள் பணிகளின் தரத்தினை கண்காணித்துக்கொள்ள வேண்டும். 

மேலும், கொரோனா பரவலை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருழுப்பின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.