சிவகங்கையில் 12 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கிய ஆட்சியர்!

 
sivagangai

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 12 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித் தொகை,  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 351 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய ஆட்சியர், மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறைத் துறை சார்பில் சிறை மீண்டோர் உதவி சங்க நிதியின் மூலம், முன்னாள் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திடும் வகையில் சுயதொழில் செய்து, தங்களது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு நிதியுதவியாக 3 நபர்களுக்கு ரூ.1,30,000 பொதுநிதியில் இருந்து வழங்கப்பட்டது.  

sivagangai

இதேபோல், நேற்றைய கூட்டத்தில் இளையான்குடியை சேர்ந்த  வாசுகி என்பவர் தையல் இயந்திரம் வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தார். மனு மீது உரிய விசாரனை மேற்கொண்டு அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.5,350 மதிப்பிலான தையல் இயந்திரம் உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், வருவாய்த் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காரைக்குடி வட்டத்தை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன்  அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.