சேலம் மாவட்டத்தில் நெல், சோளம் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு!

 
paddy farm

சேலம் மாவட்ட விவசாயிகள் நெல், சோளம், தட்டைப்பயறு உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பருவ மழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கும்பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் 2022- 2023 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை பெறப்பட்டுள்ளது.

தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வரும் வேளையில் வடகிழக்கு பருவமழை மூலம் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது எனவும், இதனால் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது சேலம் மாவட்டத்தில் நெல் (சம்பா), தட்டைப்பயறு, சோளம், நிலக்கடலை பயிர்கள் காப்பீடு செய்ய கால அவகாசம் உள்ளது.

collector

நெல் (சம்பா) பயிருக்கு ஏக்கருக்கு பிரீமியம் ரூ.341/-  செலுத்தி 15.11.2022ஆம் தேதி வரையிலும், தட்டைப்பயறு பயிருக்கு ரூ.209/- செலுத்தி 30.11.2022ஆம் தேதி வரையிலும் மற்றும் சோளம் பயிருக்கு  ரூ.131/- செலுத்தி 15.12.2022ஆம் தேதி வரையிலும் மற்றும் நிலக்கடலை பயிருக்கு ரூ.315/- 31.12.2022ஆம் தேதி வரையிலும், பயிர் காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகவும்.

விவசாயிகள் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சமிப்பு கணக்கு புத்தகத்துடன் உரிய பிரீமிய தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம், என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.