தருமபுரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3.59 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர் சாந்தி!

 
dd

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறை  தீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.3.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சாந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 475 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.

dd

தொடர்ந்து, கடந்த வார கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்த தாளநத்தம் கிராமத்தை சேர்ந்த 4 ஆதிதிராவிடர் சமூக பெண்களுக்கு, ஆட்சியர் சாந்தி ரூ.2.23 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மேலும், வெள்ளாளப்பட்டியை சேர்ந்த செல்வி, மூக்கனுரை சேர்ந்த ராஜாத்தி ஆகியோருக்கு ரூ.1  லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதேபோல் கடந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்திருந்த தாளநத்தம் கிராமத்தை சேர்ந்த  மாற்றுத்திறனாளி சிங்கரஅழகன், மணியம்பாடியை சேர்ந்த சந்திரா ஆகியோருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணை மற்றும் கடகத்துரை சேர்ந்த திருநங்கை சரஸ்வதிக்கு  மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையையும் ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

மேலும், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகியில் பணிபுரிந்து, பணியிடையில் உயிரிழந்த பன்னீர்செல்வம், சிவபிரகாசம் ஆகியோரது வாரசுதாரர்களான வினோத் மற்றும் ஜீவபாரதி ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன உத்தரவு ஆணைகளை ஆட்சியர் சாந்தி வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.