வாச்சாத்தியில் ரூ.1.71 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் சாந்தி!

 
vachathi

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 411 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் பேதாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ஆட்சியர் சாந்தி பேசியதாவது:- கடைக்கோடி கிராமமான வாச்சாத்தியில் வாச்சாத்தி கிராமத்தில்  கடந்த 10ஆண்டுகளுக்கு முன்னர்  மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது வாச்சாத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் விதமாக மக்கள் தொடர்பு முகாம் இங்கே நடத்தப்படுகிறது.

பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் இதுவரை பதிவு செய்யாதவர்கள் இருந்தால் உடனடியாக நலவாரியங்களில்  தங்களை பதிவு செய்துகொள்ள முயன்வர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் இருந்தால் தங்களை பதிவு செய்து கொண்டு, அதற்கான தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பல்வேறு  உதவிகளும், சலுகைகளும் எளிதில் கிடைக்கும். பழங்குடியினர்  அட்டை பெற இதுவரை பதிவு செய்யாதவர்கள் இருந்தால் உடனடியாக தங்கள் பெயரை பதிவு செய்துகொண்டு பழங்குடியினர் நலவாரிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற அனைத்து உதவித் தொகைகளையும் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

dd

தொடர்ந்து, வருவாய்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,  வேளாண்மை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 411 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பட்டா,  குடும்ப அட்டைகள், விலையில்லா சலவைப்பெட்டிகள், விவசாய கருவிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியர் சாந்தி வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த முகாமில் அரூர் கோட்டாட்சியர் ராஜசேகரன், அரூர் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா, போதாதம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.