திருவாரூரில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை துவங்கிவைத்த ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்!

 
tvr

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட ஜெயினத் தெரு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவை பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

breakfast

மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் முதற்கட்டமாக ஜெயினத் தெரு தொடக்கப்பள்ளி, பெண்ட்லெண்ட மாடல் தொடக்கப்பள்ளி, கீழராஜ வீதி தொடக்கப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டநாதர் தொடக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் இன்று முதல்வரின் காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 234 மாணவ, மாணவிகள் பயனடைவர்.

மேலும், மன்னார்குடி நகராட்சி ஜெயினத் தெரு தொடக்கப்பள்ளி வளாகத்தில் 1,237 சதுர அடி பரப்பளவில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சத்துணவு கூடம் கட்டுப்பட்டு இன்று ஆட்சியரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சத்துணவுக்கூடம் வாயிலாக முதல்வரின் காலை உணவுத்திட்டத்திற்கான உணவுகள் தினசரி தயார் செய்யப்பட்டு முதற்கட்டமாக 4 நகாட்சி பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.