கோவை எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை... சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு!

 
sdpi

கோவையில் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், சோதனைக்கு எதிர்ப்பு ஏராளமான கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின், மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்தில் இருந்தனர். சோதனையின்போது கட்சி நிதி வசூல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அலுவலக கணினியில் பதிவாகி உள்ள தகவல்களையும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வெளிநாட்டில் இருந்து நிதி பெறப்பட்டதா? என்றும், சமீபத்தில் நடைபெற்ற பண பரிமாற்றங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு துவங்கிய சோதனை 2.30 மணிநேரம் நீடித்தது. இதனையொட்டி, பாதுகாப்புக்காக அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

sdpi

அமலாக்கத்துறை சோதனை குறித்து தகவல் அறிந்த எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து, சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் கோட்டைமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது. இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்கும் படி, கட்சி நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் சம்மன் அளித்து புறப்பட்டு சென்றனர். இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.