நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் 24,909 மாணவர்கள் எழுதுகின்றனர்

 
exam

தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு தேர்வு துவங்கும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில்  24 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகத்தில் பிளஸ்- 2, பிளஸ் -1 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை வியாழக்கிழமை தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நாளை பிளஸ் - 2 பொதுத்தேர்வு தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் - 2 பொதுத் தேர்வினை 24,909 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்கு 104 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதைப்போல் பிளஸ்- 2 தேர்வை தனி தேர்வர்கள் 416 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

erode

பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், மாவட்டத்தில் 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்கு 30 நிமிடத்திற்கு நேரத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தடையின்றி மின்சாரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. 

பிளஸ்-1 பொதுத்தேர்வு வரும் 10ஆம் தேதி தொடங்கி 31-ம் தேதி நிறைவடைகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்- 1 பொதுத் தேர்வை 27,656 மாணவ, மாணவிகளும், 203 தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு மாவட்டத்தில் 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு வரும் 6ஆம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 28,365 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதேபோல் 871 தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு மாவட்டம் முழுவதும் 118 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.