ஆனைக்கட்டி வனப்பகுதியில் 2 காட்டுயானைகள் இடையே மோதல்... 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பலி!

 
elephant

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வனப்பகுதியில் 2 காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

கோவை வனச்சரகம் துடியலுர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டு கொண்டிருப்பதாக, அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பொன்னுசாமி என்பவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.  அதன் பேரில், கோவை வனச்சரக வன ஊழியர்கள் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, காப்புக்காட்டின் எல்லையில் சண்டையின்போது தந்தத்தால் குத்துப்பட்ட காயங்களுடன் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

coimbatore

அதன் பேரில் வனச்சரகர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, சண்டையில் ஈடுபட்ட மற்றொரு யானையின் நிலை குறித்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. நேற்று மாலை நேரம் ஆகியதால், இன்று வனத்துறை கால்நடை மருத்துவர்கள் குழுவினர், யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.