ஈரோட்டில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

 
tasmac

ஈரோடு சூளை அடுத்த எல்.இ.ஆர். காலனியில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அந்த பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஈரோடு சூளை அருகே உள்ள எல்.இ.ஆர். காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருப்புகளின் அருகிலேயே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுஅருந்த வரும் குடிமகன்கள் ஆங்காங்கே படுத்து கிடப்பதாகவும், பாட்டில்களை வீடுகளின் முன்பு வீசி சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. சில சமயங்களில் போதையில் அவர்கள் அரைகுறை ஆடையுடன் கிடப்பதால், அந்த வழியாக கடந்து செல்லும் பெண்களும், குழந்தைகளும் அச்ச உணர்வுடன் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து இருந்தனர்.

tasmac

இந்த நிலையில், நேற்று காலை ஊழியர்கள் டாஸ்மாக் கடை திறந்தபோது, அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல் ஆய்வாளர் சண்முகம், சூரம்பட்டி காவல் ஆய்வாளர் கோமதி, மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பி பவித்ரா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய அந்த பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக பெண்கள் இந்த பகுதியை கடந்து செல்ல அச்சமடைந்து உள்ளதாகவும், எனவே உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.