ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு!

 
trichy

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சிவராசு, காவல் ஆணையர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நம்பெருமாள் நாள்தோறும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள், இன்று கலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். மாலை தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வர உள்ளார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

srirangam

இந்த நிலையில், தஞ்சை களிமேடு பகுதியில் தோரோட்டத்தின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில் 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் தோரோட்டத்தின்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு இன்று காலை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வின்போது, தேர் செல்லும் பாதையில் உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு உள்ளதா? என்றும், மின்கம்பிகள் அகற்றப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆட்சியர் சிவராசு, அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

srirangam

நாளை சித்திரை தோரோட்டத்தை தொடர்ந்து, சனிக்கிழமை சப்தாவரணம் நிகழ்ச்சியும், திருவிழாவின் நிறைவு நாளான மே 1ஆம் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகாளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.