அந்தியூர் எம்எல்ஏ உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் முதலமைச்சர் தொலைபேசியில் விசாரித்தார்!

 
cm

சாலை விபத்தில் காயமடைந்த அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாஜலத்தின் உடல்நலம் குறித்த அவரது குடும்பத்தாரிடம், முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் விசாரித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாஜலம் கடந்த புதன்கிழமை இரவு சென்னை செல்வதற்காக வீட்டில் இருந்து இரவு 11 மணி அளவில் புறப்பட்டு ஈரோடு ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். வாய்க்கால் பாளையம் பகுதியில் சென்றபோது மழையின் காரணமாக அவரது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. இதில் எம்எல்ஏ ஏஜி வெங்கடாஜலத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ ஏ.ஜி. வெங்கடாஜலத்தின் உடல் நலம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொலைபேசி மூலம் அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும், விரைவில் அவர் உடல் நலம் பெற்று மக்கள் பணியாற்ற உடலை தயார் படுத்திக்கொண்டு வருவார் என்று குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

ag

இதனிடையே, எம்எல்ஏ ஏஜி வெங்கடாஜலம், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தன்னை பார்க்க நேரில் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொலைபேசியில் நலம் விசாரித்ததாகவும், இன்னும் சில நாட்களில் தான் வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் சூழல் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஏற்படும் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு கட்சியினர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.