''சென்னிமலை விவசாயி கொலை; குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு''- டிஐஜி முத்துச்சாமி பேட்டி!

 
cbe dig

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே விவசாயியை கொன்று பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக, கோவை சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. இவரது மனைவி  ஜெயமணி. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு துரைசாமியின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கணவன் - மனைவி இருவரையும் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த பணம், நகைகளை திருடிச் சென்றனர். பலத்த காயமடைந்த கணவன் - மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துரைசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஜெயமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் உப்பிலிபாளையம் பகுதியில்ன பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

murder

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற துரைசாமி வீட்டில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி நேற்று காலை பார்வையிட்டு விசாரணை மேறகொண்டார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி முத்துசாமி, விவசாயி துரைசாமி கொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வடமாநில தொழிலாளர்கள் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என கூறிய டிஐஜி முத்துச்சாமி, வடமாநில தொழிலாளர்கள் குறித்து தனி தனியாக விபரங்கள் சேகரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 1 மாதத்தில் 100 கிலோவுக்கு மேல் கஞ்சா பிடிப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன்,  வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.