கோவையில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு... கல்லூரி மாணவர், இளம்பெண் கைது!

 
cbe

கோவை தொண்டாமுத்தூரில் மூதாட்டியிடம் ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை பறித்த கல்லுரி மாணவர் மற்றும் அவரது தோழியை போலிசார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்ப கவுண்டர். இவரது மனைவி காளியம்மாள்(65). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சுடுகாட்டில் காளியம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் காளியம்மாளிடம் சென்று அந்த பகுதியில் உள்ள கோவில் குறித்து பேசியுள்ளர். அப்போது, பெண்ணுடன் இருந்த இளைஞர் திடீரென காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரையும் தேடி வந்தனர்.  இந்த நிலையில், நேற்று கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தொண்டாமுத்தூர் போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

arrest

அப்போது, அந்த இளைஞரிடம் தங்கக்கட்டி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த அவரிடம் விசாரித்தபோது, அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்துர் பகுதியில் காளியம்மாளிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர் சோமயம்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த்(20) என்பதும், இவர் தனியார் கல்லுரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. அத்துடன், அவருடன் வந்த பெண் சுங்கம் புறவழிச்சாலை பகுதியை சேர்ந்த தேஜஸ்வினி(20) என்பதும் தெரியவந்தது.

அத்துடன், இருவரும் ஆன்லைன் முலம் பணம் சம்பாதிக்க பல்வேறு நண்பர்களிடம் பணம் வாங்கியதாகவும், கடனை திருப்பி கொடுக்க முடியாததால் பெண் நண்பருடன் சேர்ந்து நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.