காஞ்சிபுரத்தில் மத்திய அரசு, எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பிற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - ஆட்சியர் ஆர்த்தி தகவல்!

 
vinayagar chaturthi - Kanchipuram Collector Aarthi

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய அரசு மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பிற்க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் ஆர்த்தி  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசில் உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசுப் பணி தேர்வாணையம்(Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இப்பணிகாலியிடங்களுக்கு கல்வித் தகுதி பட்டதாரி ஆகும். வயது வரம்பு 01.01.2022 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. மொத்த பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2022 ஆகும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ளவும் விண்ணப்பிக்கவும் https://ssc.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இளநிலை உதவியாளர் (Junior Associates) பணிக் காலியிடங்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு கல்வி தகுதி பட்டதாரி ஆகும். வயது வரம்பு 01.08.2022 தேதியில் 20 முதல் 28 ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு.  இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2022 ஆகும். மொத்த பணிக்காலியிடங்கள் 5,926 ( இந்தியா முழுவதும்). மேலும், விவரங்கள் அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://www.sbi.co.in/careers or https://bank.sbi/careers என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

SBI வாடிக்கையாளர்களே உஷார்… அக்கவுண்டில் பணத்தை சுருட்டும் சீன ஹேக்கிங் கும்பல்!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் இரு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேலும், இரு போட்டித் தேர்வுகளுக்கும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதார்கள் இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், 044 - 27237124 என்ற தொலைபேசி எண் அல்லது 9499055894 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவித்து கூகுள் பார்மை பெற்று பூர்த்தி செய்து, பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.