திருவாரூரில் திருட்டு போன ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!

 
tvr

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன மற்றும் காணாமல் போன ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் திருட்டு போன மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துத் தரக்கோரி, பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  இந்த நிலையில், மாவட்ட எஸ்பி டி.பி. சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ரூ. 7.03 லட்சம் மதிப்பிலான 71 செல்போன்களை கண்டறிந்து மீட்டனர்.

tvr

தொடர்ந்து, செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி டி.பி.சுரேஷ்குமார் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.