குமரி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.42 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு!

 
kumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.42 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டு, காணாமல் போனதாக பொதுமக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, ரூ. 42 லட்சம் மதிப்பிலான 300 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

kumari

தொடர்ந்து, நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்பி ஹரிகிரண் பிரசாத், செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும், செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.  பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எஸ்பி ஹரிகிரண் பிரசாத், குமரி மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் காணாமல் போன ரூ.87 லட்சம் மதிப்பிலான 622 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 17 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், செல்போன் காணாமல் போனாலோ, திருட்டு போனாலோ உடனடியாக காவல் நிலையத்திலோ அல்லது https://eservices.tnpolice.gov.in என்ற காவல் துறை இணைதளத்திலோ  புகார் அளிக்கலாம் என கூறினார்.