மதுரை மாவட்டத்தில் ரூ.1.29 கோடி மதிப்பிலான காணாமல் போன செல்போன்கள் மீட்பு - மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தகவல்!

 
mdu

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் காணாமல் போன ரூ.7.20 லட்சம் மதிப்பிலான செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த ஒரு மாதத்தில் ரூ.7.20 லட்சம் மதிப்புள்ள 50 மொபைல் போன்கள் கண்டுபிடித்து மீட்டனர். இதனை தொடர்ந்து, இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம், சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.

mdu

இதனிடையே, மதுரை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள 927 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் இதுவரை ரூ. 32 லட்சத்து 18 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மதுரை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுபோல மோசடியாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும், வங்கிகணக்கு எண், ஓடிபி போன்ற விபரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் முதலீடு செயலிகள் மற்றும் ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும்,  ஆன்லைன் கடன் செயலிகளில் பணம் பெற்று ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ காலை அட்டண்ட் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

mdu

மேலும், வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், ரிமேட் அக்செஸ் செயலிகளான Anydesk, teamviewer போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். யாரேனும் மேற்கூறிய வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம் என மதுரை எஸ்பி சிவபிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.