காஞ்சிபுரம் அருகே செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதம் - போக்குவரத்து நிறுத்தம்!

 
kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மாகரல் -  வெங்கச்சேரி இடையிலான தரைப்பாலம் சேதமடைந்ததல், அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் நீர்நிலைகளில்  குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், உத்திரமேரூர் ஒன்றியம் வெங்கச்சேரி மற்றும் காஞ்சிபுரம் ஒன்றியம் மாகரல் பகுதிகளை இணைக்கும் விதமாக செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தரைப்பாலத்தில் நேற்று வெள்ளநீர் மூழ்கடித்து சென்றது. மேலும், தரைப்பாலத்தில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டன.

kanchi

இதனால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வெங்கச்சேரி தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு மாவட்ட காவல் துறை தடை விதித்துள்ளது. இதனால் வெங்கச்சேரி, மணல்மேடு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வாகனங்கள் செல்லாத வண்ணம் மாகரல் போலீசார் தடுப்புகளை அமைத்து தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளதால் வாகனங்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி காஞ்சிபுரம் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.