கள்ளக்குறிச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பொறியியல் மாணவர் பலி!

 
accident

கள்ளக்குறிச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் நீலமேகம் (64).இவர் நேற்று தனது மகன் விக்னேஷ், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோருடன் பவானியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல், விழுப்புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் கண்டமங்கலத்தை சேர்ந்த விஷ்வா(20), அவரது நண்பர்கள் 5 பேர் என 6 பேர், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

kallakurichi GH

2 கார்களில் வந்தவர்களும், அங்கு மாடுமேய்த்துக் கொண்டிருந்த ஏமப்பேரை சேர்ந்த கோவிந்தன் என்பரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார், விபத்தில் பலியான பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.