அருப்புக்கோட்டை அருகே மினிவேன் மீது கார் மோதல்; சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

 
accident

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை அருகே மினிவேன் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கழுவன் பொட்டல் கிராமத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், நேற்று விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனம் முடிந்து, நேற்று மாலை அனைவரும் மினி வேனில் கமுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச் சாலையில் சென்றபோது வேன் மீது, பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் மினி வேன் சாலையோரம் உள்ள ஓடைப்பள்ளத்தில் கவிழ்ந்தது.

dead body

இந்த விபத்தில் வேனில் இருந்த பெருமாளக்காள் (50), புவித்ரா (12), நிதிமாறன் (4) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து வந்த பந்தல்குடி போலீசார், விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருக்கன்குடி கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் கழுவன் பொட்டல் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.