ஈரோட்டில் புதிய தொழில்நுட்பத்திலான துணைமின் நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்!

 
erode

ஈரோடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 230/110 kv எரிவாயு இன்சுலேட்டட் சுவிட்ச் கியர் துணை மின் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். 

இதனையொட்டி, ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, '' இடநெருக்கடி காரணமாக, ஈரோடு தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் 70 சென்ட் நிலத்தில், ரூ.80.26 கோடி மதிப்பீட்டில் காஸ் இன்சுலேட்டட் சுவிட்ச் கியர் அடிப்படையிலான துணை நிலையம் அமைக்கப்பட்டது. திறந்தவெளி துணை நிலையங்களில் பறவைகள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால், எரிவாயு காப்பிடப்பட்ட சுவிட்ச் கியர் நிலையம் ஒரு கட்டிடத்திற்குள் உள்ளது. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மாதிரி ஸ்டேஷன்கள் இருந்தும், சென்னைக்கு அடுத்தபடியாக, இங்கு மட்டும், புதிய வகை ஸ்டேஷன்கள் ஏற்படுத்தப்பட்டது. 

erode

துணை மின் நிலையத்திலிருந்து ஒன்பது 110 kv துணை நிலையங்களுக்கு மின்சாரம் அனுப்பப்படும். இதன் மூலம் மின் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தவும், தொழில் வேளாண் வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியும். மேலும், மின் பரிமாற்ற இழப்பை குறைக்கவும், 200 மெகாவாட் மின்சாரத்தை கையாளவும் உதவிடும். அதேபோல், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை பகுதிகளின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெறவும் இது உதவும், இவ்வாறு அவர்கள் கூறினர்