வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு மாட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தம்!

 
cattle market

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் வியாபாரம் மந்தமுடன் நடைபெற்றது.

ஈரோடு கருங்கல் பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தந்து மாடுகளை வாங்கிச்செல்வர். சந்தைக்கு வழக்கமாக 700 முதல் 800 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்படும்.இந்த நிலையில், நேற்று கூடிய சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. பசு மாடு - 350, எருமை மாடு-  200 மற்றும் வளர்ப்பு கன்றுகள் - 50 என மொத்தம் 600 மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

cattle market

மேலும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் ஆந்திரா, கர்நாடகாவில் மாடுகளை ஏற்றிச்செல்லப்படும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதால் அம்மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வரவில்லை. இதனால் நேற்று கூடிய மாட்டுச் சந்தையில் வியாபாரம் மந்தமாகவே நடைபெற்றது. நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில 60 சதவீதம் மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.