மைத்துனரை கத்தியால் குத்திக்கொன்று, இளைஞர் தற்கொலை... கம்பத்தில் பரபரப்பு!

 
Murder

தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப தகராறில் மைத்துனரை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர், போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கம்பம் 15-வது வார்டு கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன்கள் சிவகுமார் (25), சங்கர்(23). இருவரும் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த சங்கர், தனது அண்ணன் சிவகுமாரிடம் தகராறு செய்து உள்ளார். அப்போது அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் சங்கரின் சகோதரி சங்கீதாவின் கணவர் சுருளிராஜ்(30), இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.

cumbum

இதில் ஆத்திரமடைந்த சங்கர், தான் வைத்திருந்த கத்தியால் சுருளிராஜை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் நகர் தெற்கு போலீசார், கொலையாளி சங்கரை பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர்.

அப்போது, சங்கர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனை அடுத்து, போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.