சீர்காழியில் பேக்கரியின் பூட்டை உடைத்து 10 கிலோ இனிப்புகள் கொள்ளை... மர்மநபருக்கு போலீசார் வலை!

 
sirkali

சீர்காழியில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ இனிப்புகளை திருடிச் சென்ற மர்மநபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் சந்துரு. இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொறுப்பாளராக உள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடிந்து பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து, நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது, பேக்கரியின் பக்கவாட்டு பகுதியில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்துரு கடையை திறந்து சென்று பார்த்துள்ளார். அப்போது, கடையில் வைத்திருந்த லட்டு, ஜாங்கிரி உள்ளிட்ட 10 கிலோ இனிப்புகளும், மின்னணு எடை கருவியும் திருட்டு போனது தெரியவந்தது.

sirkali

இது குறித்து சந்துரு சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொள்ளையன் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. எனினும் கடையில் மற்றொரு புறம் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து, சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சி அடிப்படையில் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.