மின்கம்பங்களை மாற்றக்கோரிய விண்ணப்பத்தை பதிவேற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம்; மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது!

 
bribe

கோவில்பட்டி அருகே நிலத்தின் வழியாக செல்லும் மின்கம்பங்களை மாற்றக்கோரிய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாரதிசங்கர். இவர் நாலாட்டின் புதூரில் உள்ள தனது தங்கை அனுஷியா என்பவரது நிலத்தின் வழியாக செல்லும் மின்கம்பங்கள் மற்றும் மின்சார ஒயரை மாற்றக்கோரி, நாலாட்டின்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது, அந்த அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரியும் பொன்ராஜா என்பவர், பாரதி சங்கரின் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

bribe

லஞ்சம் தர விரும்பாத பாரதி சங்கர், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அங்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழங்கிய ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை பாரதி சங்கர், இளநிலை பொறியாளர் பொன்ராஜாவிடம் வழங்கினார்.  அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஓழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்து, அவரிடம் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.