காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்... காஞ்சிபுரம் அரசு துவக்கப்பள்ளியில் ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு!

 
kanchi

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் அரசு துவக்க பள்ளியில் விரைவில் துவங்கவுள்ள காலை சிற்றுண்டி வழங்கல் தயாரிப்பு உணவு கூடத்தை, ஆட்சியர் ஆர்த்தி பார்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்தார்,

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் விதி 110-ன் கிழ் முதல்வர் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 20 பள்ளிகளில் 1600 மாணவர்கள், மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க காஞ்சிபுரம் புதுப்பாளைய தெருவில் உள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் உணவு தயாரிப்புக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று பரிச்சய முறையில் உணவு தயாரிக்கப்பட்டு 20 துவக்க பள்ளிகளுக்கு காலை 8.30 மணி அளவில் 2 வாகனங்கள் மூலம் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு மாணவர்கள் உணவு அருந்தினர். இந்த உணவு தயாரிப்பு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

kanchi

அப்போது, உணவு கூடத்தில் சமையல் எரிவாயு அறை பகுதி, உணவு கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, குடிநீர் இயந்திரம் மற்றும் உணவு பாத்திரம் சுத்தம் செய்யும் அறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கு தாயாரித்து வழங்கப்பட்ட காலை உணவு மாதிரிகளை சுவைத்து, இதுபோன்று  சுகாதாரமான உணவுகளையும், இருப்பிடங்களை அமைத்து மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.