திருச்சி அருகே துணிகரம்... வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 2.20 லட்சம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவேரி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். முத்த மகள் சென்னையில் வசித்து வரும் நிலையில், பஞ்சவர்ணமும், இளைய மகளும் பெட்டவாய்த்தலையில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி பஞ்சவர்ணமும், அவரது இளைய மகளும் சென்னைக்கு சென்றுள்ளார்.

police

இதனால் பஞ்சவர்ணத்தின் உறவினரான நடராஜன் என்பவர் அவரது வீட்டை பார்த்து கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை நடராஜன் வந்தபோது பஞ்சவர்ணத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன், இதுகுறித்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது,  மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 70 பவுன் நகை, ஒரு தங்க கைக்கடிகாரம், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், 2.20 லட்சம் ரொக்கப் பணம், பட்டுப் புடவைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பஞ்சவர்ணம் அளித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.