வேலூரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்!

 
vellore

வேலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி கலைசெல்வி(43). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் கலைச்செல்வி கூலி வேலை செய்து, தனது மகள்களை வளர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் படுகாயமடைந்த கலைச்செல்வி, சிகிச்கைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை கலைச்செல்விக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். 

vellore

தொடர்ந்து, வேலூர் அரசு மருத்துவமனை முதல்வர் செல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் இதயம், சிறுநீரகம், கல்லீரல், 2 கண்கள் ஆகியவற்றை தானமாக பெற்றுக் கொண்டனர். தானமாக பெறப்பட்ட இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், சிறுநீரம் வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கு, கல்லீரல் மற்றும் இரு கண்கள் ஆகியவை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது முதன்முறையாக உடல் உறுப்புகள் தான அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.