வாணியம்பாடி அருகே தனியார் பேருந்து மோதி பள்ளி மாணவர் பலி!

 
vaniyambadi

வாணியம்பாடி அருகே சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவர் மீது தனியார் பேருந்து மோதியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகன் தரணி(8). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை சிறுவன் தரணி தனது பெற்றோருடன் வாணியம்பாடி அருகே கலந்திரா பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, சிறுவன் தரணி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த தனியார் பேருந்து, சிறுவன் தரணி மீது மோதியது.  

dead body

இந்த விபத்தில் தரணி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தரணி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை சிறைப்பிடித்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதுடன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, கிராமிய போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பிரசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.