ஈரோடு எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!

 
ERODE

திரிபுராவில் மாரடைப்பால் மரணமடைந்த ஈரோட்டை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் வடிவேலின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(38). இவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த 18 வருடமாக பணியாற்றி வந்தார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். தற்போது வடிவேல் திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியிடம் அவர் பேசியபோது திரிபுராவில் கடும் குளிர் நிலவி வருவதாக கூறியுள்ளார். இந்த நிலையில், வடிவேலுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்த தகவல் வடிவேல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ERODE

மேலும், வடிவேல் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது உடல் திரிபுராவில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நேற்று காலை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவரது உடல் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளிக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, வடிவேலின் உடல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் உள்ள மின் மயானத்தில் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.