ஊத்தங்கரை அருகே பேக்கரி உரிமையாளரிடம் நூதன முறையில் பைக் திருட்டு... சிசிடிவி காட்சி அடிப்படையில் மர்மநபருக்கு வலை!

 
bike theft

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பேக்கரி கடை உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை நூதன முறையில் திருடிச் சென்ற இளைஞரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரிக்கு வந்த இளைஞர் ஒருவர் 10 கிலோ இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார்.  அதற்கு உரிய பணத்தை கொடுத்தபோது தன்னிடம் ரூ.1,000 குறைவாக இருப்பதாக கூறிய அந்த நபர், ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுக்க வேண்டும் என்றும், அதனால் கடை உரிமையாளரிடம் இருசக்கர வாகனத்தை தரும்படி கேட்டுள்ளார். அப்போது, கடை உரிமையாளர் தனது வாகனத்தை வழங்கிய நிலையில், அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

uthangarai

ஆனால்  நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் தனது வாகனம் திருடு போனதை உணர்ந்த பேக்கரி கடை உரிமையாளர், இதுகுறித்து சிங்காரபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். பேக்கரி கடை உரிமையாளரிடம் நூதன முறையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.