கார் மீது மோதியதால் பறிக்கப்பட்ட பைக்... விரக்தியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

 
kodaikanal

கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டதால் 17 சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த பெருமாள்மலையை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் விஜேஸ் பாண்டியன் (17). கல்லூரி மாணவரான இவர், கடந்த 19ஆம் தேதி துக்க நிகழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு, நண்பர்கள் சுபாஷ், தினேஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பெருமாள் மலைக்கு திரும்பி கொண்டிருந்தார். பெருமாள்மலை - பழனி பிரிவு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையில் நின்ற கார் மீது, விஜேஸ் பாண்டியனின் இருசக்கர வாகனம் மோதியது. இதனால் ஆத்திரமடைந்த, கார் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள், விஜேஸ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். 

kodaikanal

மேலும், காரில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து தரக்கோரி, அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டுள்ளனர். இதனால் மன வேதனை உடன் வீட்டிற்கு திரும்பிய விஜேஷ் பாண்டியன், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் விஷ்ணு பாண்டியன், தனது தம்பியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் பெருமாள்மலையை சேர்ந்த வினோத் (33), தங்கம் (39) ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.