பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.45 அடியாக உயர்வு... பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

 
bhavanisagar

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.45 அடியாக உயர்ந்துள்ள நிலையில், பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை அணை அமைந்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2.40 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்ட மலைப் பகுதில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 

bhavanisagar dam

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,222  கனஅடி நீர்வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100  கனஅடியும் என மொத்தம் 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அணை நீர்மட்டம் 104.45 அடியை எட்டியது. மேலும், அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ளதால் விரைவில் முழு கொள்ளளவான 105 எட்டும் என்பதால் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பவானிசாகர் உப கோட்ட உத செயற்பொறியாளர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 11 மணி அளவில் 104.45 அடியை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக எந்த நேரத்திலும் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலை உள்ளதால், அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.