வேலூரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது; 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
vellore

வேலூர் மாவட்டத்தில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 27 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

வேலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.

vlr

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஆனைமல்லூர் பகுதியை சேர்ந்த தனசேகர் (45) என்பதும், இவர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும் திருடிய பணத்தில் மது அருந்தி உல்லாசமாக வாழ்ந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, தனசேகர் மீது வேலூர் தெற்கு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரிடம் இருந்து 27 திருட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.