ஈரோட்டில் பாஜக பிரமுகர் பர்னிச்சர் கடையில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - போலீசார் விசாரணை!

 
erode bomb

ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் மர்மநபர்கள் பெட்ரோல் பாக்கெட்டுகளை வீசி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் தட்சிணாமூர்த்தி (51) பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்த நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் ஜன்னல் வழியாக பர்னிச்சர் கடைக்குள் 2 பெட்ரோல் பாக்கெட்டுகளை போட்டு, தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் கடையின் உள்ளே இருந்த டேபிள் சிறியளவில் எரிந்து சேதமடைந்தது. நேற்று காலை தட்சிணாமூர்த்தி கடையை திறந்தபோது, உள்ளே பெட்ரோல் சிதறி கிடப்பதும், ஜன்னல், டேபிள் ஆகியவை எரிந்ததை கண்டும் அதிர்ச்சடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார்.

erode

அதன் பேரில், ஏடிஎஸ்பி கனகஸ்வரி, டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகின்றனர். இதனிடையே தகவல் அறிந்து கடையின் அருகே பாஜக நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.