நெல்லையில் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்ட மாடுகளை அவிழ்த்துவிட்ட பாஜக நிர்வாகி கைது!

 
nellai

நெல்லையில் சாலையில் சுற்றி திரிந்தபோது மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்ட மாடுகளை அனுமதியின்றி அவிழ்த்துவிட்ட மாவட்ட பாஜக தலைவரை போலீசார் கைது செய்தனர். 

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளை சுற்றித் திரிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி, நெல்லை மாநகர் பாளையங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து ஏலம் விடுவதற்காக அவற்றை சமாதானபுரம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியின் கீழே கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில், மாடுகளை ஏலம் விட முயன்றபோது அதற்கு மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மாட்டின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட பாஜக தலைவரான தயா சங்கர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

cow

மேலும், தண்ணீர் தொட்டியில் கட்டியிருந்த மாடுகளை உரிய அனுமதியின்றி அவிழ்த்துச் சென்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அனுமதி இன்றி மாடுகளை அவிழ்த்து விட்ட பாஜக மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தயா சங்கரை கைது செய்தனர்.