கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோடு மாவட்ட கோவில்களில் மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்!

 
ayyappa

கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோடு மாவட்ட கோவில்களில் அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த புதன் கிழமை கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில், கார்த்திகை மாத பிறப்பையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அய்யப்ப பக்தர்கள் கோவில்களில் அதிகாலை முதலே மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

ayyappa

பவானி கூடுதுறையில் அதிகாலை 3 மணி முதலே அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதேபோல, ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யப்பா சேவா நிறுவனத்தின் சார்பில், அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டனர்.

இதேபோல், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள பச்சைமலை பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் நேற்று அதிகாலை முதலே குவித்த அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.