வாணியம்பாடியில் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து... ஓட்டுநர் பலி, 6 பெண்கள் படுகாயம்!

 
vaniyambadi

வாணியம்பாடியில் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 6 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தை சேர்ந்த 6 பெண்கள் மாராப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை ஷேர் ஆட்டோவில் காலணி தொழிற்சாலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். ஷேர் ஆட்டோவை வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த மேகநாதன் (50) என்பவர் ஓட்டிச்சென்றார். வாணியம்பாடி பெருமாள் பேட்டை புறவழிச்சாலை அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மேகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

vaniyambadi

மேலும், ஆட்டோவில் பயணித்த 3 பெண்களுக்கு பலத்த காயமும், மற்ற 3 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் வாணியம்பாடி டவுன் போலீசார், மேகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.