சமயபுரம் கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்திக்கொலை... கள்ளக்காதலியின் கணவர் வெறிச்செயல்!

 
murder

திருச்சி சமயபுரம் கோவிலில் மனைவியின் கள்ளக்காதலனை, அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் சகோதரர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சின்னராசு (35). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கலைச்செல்வி உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் சின்னராசுவுக்கு, மண்ணச்சநல்லூர் சீதேவி மங்கலம் பகுதியை சேர்ந்த புல்லட் ராஜா (41) என்பவரது மனைவியான கிருஷ்ணவேணி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரியின் சகோதரரான புல்லட் ராஜா, கடந்தாண்டு ஈச்சம்பட்டி ஏரியில் லாரி ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். இதனால் சின்னராசுவும், கலைச்செல்வியும் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளனர்.

samayapuram

சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த புல்லட் ராஜா, இருவரையும் கண்டித்து கள்ளத்தொடர்பை கைவிடும்படி அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அவர்கள் அதனை கேட்கவில்லை. இந்த நிலையில், நேற்றிரவு கிருஷ்ணவேணி, தனது அக்கா, அவரது கணவர் ஆகியோருடன் சின்னராசுவின் ஆட்டோவில் சமயபுரம் கோவிலுக்கு சென்றிருந்தார். இதனை அறிந்த புல்லட்ராஜா அங்கு வந்துள்ளார். அப்போது, கோவில் முடிக்காணிக்கை செலுத்தும் இடத்தில் சின்னராசுவுக்கும், புல்லட் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புல்லட் ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்னராசுவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சமபவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் புல்லட் ராஜா, மனைவி கிருஷ்ணவேணியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார், கொலையான சின்னராசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த புல்லட்ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.