திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவியை மதம் மாற்ற முயற்சி?... இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

 
tiruppur

திருப்பூர் மாநகராட்சி அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்ற ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ராக்கியாபாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி திருநீறு பூசியும், ருத்திராட்சம் அணிந்தும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியைகள், மாணவி திருநீறு பூசுவது, ருத்திராட்சம் அணிவது குறித்து விமர்சித்ததாகவும், மாற்று மத கடவுளை வழிபடமாறு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. 

tiruppur

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில், மாணவி திருநீறு பூசியது மற்றும் ருத்ராட்சம் அணிவது குறித்து 2 ஆசிரியைகள் அவதுறாக பேசியதாகவும், மேலும், மாற்று மத கடவுளை வழிபட வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ள மாணவியின் பெற்றோர்,  சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.  இந்த புகார் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியைகளிடம், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவியை மத மாற்றம் செய்ய முயன்ற ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜெய்வாபாய் அரசுப்பள்ளி முன்பு இந்து முன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பள்ளி ஆசிரியைகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.