தந்தூரி சிக்கனுக்கு சைடிஷ் கேட்ட இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்... ஒட்டல் உரிமையாளர் உள்பட 8 பேர் கைது!

 
nellai

நெல்லையில் ஹோட்டலுக்கு சாப்பிட வந்த இளைஞர்களை சரமாரியாக தாக்கிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே தெற்கு புறசாலையில் கசாலி என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த புதன்கிழமை இரவு சிவபெருமாள், மணிகண்டன், சதிஷ்குமார் ஆகியோர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் ஆர்டர் செய்த தந்தூரி சிக்கனுக்கு, சைடிஷ் கேட்டுள்ளனர். அதற்கு, ஹோட்டல் ஊழியர் சைடிஷ் தீர்ந்துவிட்டதாக கூறியதால், இதனை உணவு கட்டணத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளனர்.

nellai

இது தொடர்பாக இளைஞர்களுக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், சிவபெருமாள், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த 3 இளைஞர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

nellai

தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்ட நிலையில், சமுக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சி அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹோட்டல் உரிமையாளர் சையது பஷிர் மற்றும் 7 ஊழியர்களை கைது செய்தனர். இதனிடையே, இளைஞர்களை ஹோட்டல் ஊழியர்கள் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.