தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்... ஆலங்குளம் பேரூராட்சி சேர்மன் கணவர் மீது வழக்குப்பதிவு!

 
alangulam

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களை தாக்கிய புகாரில், திமுக பேரூராட்சி சேர்மன் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், புதுப்பட்டி பரம்பு பகுதியில் கொட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தூய்மை பணியாளர்கள் அஜித், இசக்கி முத்து ஆகியோர் வழக்கம்போல் குப்பைகளை கொட்ட சென்றுள்ளனர். அப்போது, பேரூராட்சி சேர்மன் திமுகவை சேர்ந்த சுதாவின் கணவரான மோகன்லால் என்பவர், தூய்மை பணியாளர்கள் அங்கு குப்பையை கொட்டியது குறித்து கேட்டு, அவர்களை தாக்கி உள்ளார். மேலும், அவர்களது செல்போன்களையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள், சேர்மன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

alankulam

எனினும் அவர்களது புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்களை தாக்கிய மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆலங்குளம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர், அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பேரூராட்சி சேர்மன் கணவர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.