காரமடை அருகே பெரியார் பெயரில் திறக்கவிருந்த உணவகம் மீது தாக்குதல்; இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் கைது!

 
periyar restaurent

கோவை மாவட்டம் காரமடை அருகே பெரியார் பெயரில் திறக்கப்பட இருந்த உணவகத்தை அடித்து நொறுக்கிய சம்பவத்தில் இந்து முன்னணியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் இன்று உணவகம் துவங்க இருந்தார். இந்த நிலையில், நேற்றிரவு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள், பெரியார் பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உணவகத்தில் இருந்த மேசை, டேபிள்கள், பெயர் பலகை உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபாகரன் மீதும் தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அவரது மனைவியையும் அவதுறாக பேசிவிட்டு தப்பிச் சென்றனர். 

arrest

இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரபாகரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசசை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் காரமடை போலீசார், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ரவி பாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியார் பெயரிலான உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, காரமடை பேருந்து நிலையம் பகுதியில் இன்று மாலை தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தலைமையில் அனைத்துக்கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.