நத்தத்தில் நா.த.க நிர்வாகி சிவசங்கரன் மீது தாக்குதல்... கல்குவாரி உரிமையாளர் கைது!

 
ntk

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவசங்கரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான சிறுகுடி, செந்துறை, தேத்தாம்பட்டி, பண்ணியாமலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், அனுமதியின்றி வெள்ளை கற்களை கடத்திச்செல்வதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் தலைமையில் அக்கட்சியினர் லாரிகளை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இதனால் கல்குவாரி உரிமையாளருக்கும், சிவசங்கரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

arrest

இந்த நிலையில், நேற்று நத்தம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சிவசங்கரன் இருந்தபோது, பண்ணியாமலையில் கல்குவாரி நடத்திவரும்  சின்னையா, ராஜா ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று அவதுறாக பேசி, கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிவசங்கரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், சிவசங்கரன் தாக்கியதில் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ராஜா தரப்பினர் அளித்த புகாரின் பேரில் சிவசங்கரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனிடையே, சிவசங்கரன் தாக்கப்பட்டதை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் ராஜாவின் கல்குவாரிக்கு சென்று அங்கிருந்த ஹிட்டாச்சி வாகனம் மற்றும் ஷெட்டை தீவைத்து எரித்ததாக ராஜாவின் மனைவி சரசு நத்தம்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார், அங்குராஜ் , தினகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.