ஒரே நாளில் 2 உலக சாதனைகளை படைத்த அறந்தாங்கி தனியார் பள்ளி மாணவர்கள்!

 
aranthangi

அறந்தாங்கி தனியார் பள்ளியில் 10 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகள் 2 மணிநேரத்தில் 2 ஆயிரம் ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டியும், உலகின் பெரிய ஆரிகாமி ஓவியம் செய்தும் 2 உலக சாதனைகளை புரிந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனியார் பள்ளி சார்பில் எலைட் வேல்ட்,  ஆசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்புகளின் சார்பில் பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்ற சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் 3 வயது முதல் 10 வயது வரை உள்ள மாணவ - மாணவிகளுடன், மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகள் சுமார் 100 பேர் என மொத்தம் 400 பேர் கலந்துகொண்டு, 2 மணிநேரத்தில் 2 ஆயிரம் ஓவியங்களுக்கு வர்ணம்தீட்டி உலக சாதனையை நிகழ்த்தினர். இந்த ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து ஏலம்விட்டு, அதன் மூலம் பெறப்படும் தொகையை, கொரோனா நோய்தொற்றின்போது பாதுகாப்பு பணியில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த முன்கள பணியாளர்களின் குடும்பத்தினருக்கும், மாற்றுத் திறனாளிகளின் கல்வி செலவுக்கும் நன்கொடையாக வழங்கினர். 

aranthangi

மேலும், 2-வது உலக சாதனையாக 12 வயது முதல் அனைவரும் கொரனா தடுப்புஊசி செலுத்தி விழிப்புணர்வு செய்யும் வகையில், 10 மீட்டர் நீளமும் 10 அகலமும் கொண்ட பிரமாண்டமான விரிப்பில் 5 வண்ணங்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான, பல்வேறு வடிவங்களை மாணவ - மாணவிகளுடன், ஆசிரியர்களும் இணைந்து கப்பல், இதயம், மீன் என பல ஆரிகாமி வடிவங்களை செய்து, அதனை ஒட்டி உலகின் மிகப்பெரிய அளவிலான ஆரிகாமி ஓவியம் செய்தனர். நடுவர்கள், உலக சாதனையை ஏற்றுக்கொண்டு, சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். 

aranthanki

ஒரே நாளில் மிக குறைந்த வயதுடைய மற்றும் உடல் குறைபாடு உள்ள மாணவ-மாணவிகளின் மிக பிரம்மாண்டமான 2 உலக சாதனை நிகழ்ச்சியில், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், நகர்மன்ற தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு ஓவியங்களை வாங்கி நன்கொடை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நியூஸ்7 தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜயன் கலந்துகொண்டு பெற்றோர்கள், குழந்தைகளிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கிப் பேசினார்.